×

இருதரப்பு உறவு, உக்ரைன் போர் பற்றி பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், உக்ரைன் போர் நிலவரம் குறித்தும் தொலைபேசியில் உரையாடினார். இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மெய்நிகர் உச்சி மாநாடு வரும் 4ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘இரு தலைவர்கள் இடையேயான உரையாடல் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இரு தலைவர்களும் உக்ரைன் நிலவரம் குறித்து விவாதித்தனர். அங்குள்ள நிலைமையை அதிபர் புடின் விளக்கினார். அப்போது, மோதலை தீர்க்க அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க உக்ரைன் திட்டவட்டமாக மறுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மற்றும் ஜி20 நாடுகளுக்குள் தங்கள் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதிபடுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை இதுவரை கண்டிக்காத இந்தியா, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

* உற்ற நண்பர் மோடி

முன்னதாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் புடின், ‘‘இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களும், உற்ற நண்பருமான பிரதமர் மோடி பல ஆண்டுகளுக்கு முன்பே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கினார். இது, இந்திய பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை பின்பற்றுவது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, அந்நிய முதலீட்டாளர்களை கவருவதற்கான பயனுள்ள இத்திட்டத்தை உருவாக்கியதற்காக இந்திய தலைமையை பாராட்டுகிறேன். மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளதால், ரஷ்ய நிறுவனங்களின் தயாரிப்புகளை திறம்பட சந்தைப்படுத்த உதவும் ஆதரவை இந்தியா வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

 

The post இருதரப்பு உறவு, உக்ரைன் போர் பற்றி பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,PM Modi ,Ukraine ,New Delhi ,Vladimir Putin ,Modi ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தில் பிரதமர் மோடி தனது...